Tuesday, August 12, 2014

5.Thai Mann.

   விஜயனுக்கு மீனா கூறிய சந்தோஷமான செய்தி உண்மையிலேயே

மிகவும் நல்ல இனிமையான செய்தி.நம்மையும் நமது பணியையும்

அங்கீகரித்து,உனக்கு அளிக்கப்பட்ட பதவி உயர்வுக்கு உனது மேலாண்மை

திறமையும்,உனது பணியின் நேர்த்தியும் தகுதியானவைதான் என்று  நமது

நிர்வாகம் நமது தன்னம்பிக்கையை  உயர்த்தி, நமக்களிக்கும் உயர்ந்த

விருதுதான்  இந்த பதவி உயர்வு.தகுதியான பதவி உயர்வு,நிர்வாகம்  தன்

பணியாளர்களிடமிருந்து பெறும்  " விசுவாசம் " என்ற மிகப் பெரிய, மதிப்பு

 மிக்க " போனஸ் " ஆகும். ஆனால் இவ்வளவு நல்ல செய்தியைக் கேட்ட

பின்பும்,விஜயனின் கலக்கம் இன்னும் அதிகரிக்கிறது என்றால்,அவனது

மனதின் சங்கடம் ஆழமானதாகத்தான் இருக்க வேண்டும்.மீனா

அனுமானித்தாள்.


   விஜயன் இன்னும் மீனாவை பார்த்துக் கொண்டேயிருந்தான்.ஆனால்

அவனது கவனம் முழுவதையும் வேறெதுவோ ஆக்ரமித்துக் கொண்டு

இருப்பது மீனாவுக்குத் தெளிவாகப் புரிந்தது.விஜயனிடம்  இன்னும்

நெருங்கி அமர்ந்து,இன்னும் சிறிது கூடுதலான வாஞ்சையுடன் அவனது

கைகளை வருடியபடி, " ஜெய்! " என அவன் முகம் தொட்டுத் திருப்பினாள்.

திடுக்கிட்டுத் திரும்பினான் விஜயன்.


    மீனா,அவனை சகஜ நிலைக்கு திருப்ப அவனை சீண்டினாள்."என்னது!

இப்போவெல்லாம் ஐயா பலத்த யோசனைமயமாய் இருக்கிறீர்?உங்களது

சகதர்மிணிகிட்டேயும் சிறிது பகிர்ந்து கொண்டால் நலமாக இருக்கும்

அல்லவா?.மறுகணம் பக்கென்று சிரித்து விட்டான் விஜயன்.தன்  காதல்

மனைவியை இறுக அணைத்தபடி,"பெண்களை  ஏன் சக்திமயமாய் உருவகப்

படுத்துகிறார்கள் தெரியுமா?". "ஏனாம்"?.கொஞ்சினாள் மீனா.


   "அட இந்த அழகான கொஞ்சலுக்கு ஒரு ராஜ்ஜியத்தையே பரிசளிக்கலாம்.

ஆனால் ராஜ்ஜியத்துக்கு நான் எங்கே போவேன்?". என்று   நிஜமாகவே

கவலைப் பட்டான் விஜயன்."அதான் " சற்று யோசித்தவன் " நம் குடும்பம் "

என்று மனம் நிறைந்து வந்த ஒரு பெண், தான் வந்து சங்கமித்த குடும்பத்துடன்

 இழைந்து,எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் ஒரு தெளிவுடன் செயல்

படும் அந்த சக்தி பெண்களுக்கே உரியது மீனா!அதனால்தான் பெண்களை

சக்திமயமாய் உருவகப்படுத்துக்கிறார்கள் என தோன்றுகிறது". என்று

ஆழ்ந்த குரலில் அமிழ்ந்து கூறினான்.


   " எல்லாம் சரி! ஐயா இன்னும் விஷயத்திற்கே வரலேயே! ஏன்னா,

எனக்கு இந்த அன்பான ராஜா கிட்டேயிருந்து இன்னொரு ராஜ்ஜியமும் பெறக்

கொள்ளை ஆசை".விஜயனின் மனதை இலகுவாக்கினாள் மீனா.இப்போது

விஜயன் மனம் மிகவும் இலேசாகிப் போனது.மனம் தெளிந்தது. மீனாவின்

பக்கம் நன்றாகத் திரும்பி,"மீனா நான் சொல்றதை கேட்டப் பிறகு உன்

ஆலோசனையை சொல்லு".


    சற்று இடைவெளி விட்டுத் தொடர்ந்தான்." எனக்கு என்னமோ தெரியலே!

இப்போது எல்லாம் அம்மா ஞாபகம் அடிக்கடி வருது.ஊரில்

அக்காவின் மேற்பார்வையில் விட்டுட்டு வந்தாலும் மனது மிகவும் சங்கடப்

படுகிறது.அப்பாவின் காலத்திற்கு பிறகு, இந்த இருபது வருடங்கள்அம்மாவை

மிகவும்  தனிமைப் படுத்திவிட்டோமோ என்று மனம் மிகவும் சஞ்சலப்

படுகிறது மீனா! இதுவரை ஓய்வில்லாதப் பணியினால் எனக்கு இந்த

எண்ணத்தின் தாக்கம் புரியவில்லை என நினைக்கிறேன்.ஆனால் இப்போது

ஓய்வுப் பெற்றப் பிறகு இந்த எண்ணம் என்னை அனலில் இட்ட புழுவாக

வருத்தும் போல் இருக்கிறது.எனக்கு இனி அம்மா கூடவே  இருக்கலாம்

எனத் தோன்றுகிறது.உன்னையும் அழைத்துக் கொண்டு போகத்தான்

ஆசை.ஆனால் உன்னை நிர்பந்திக்க மாட்டேன்.வேண்டுமானால் நீயும்,

ஸ்ரீதரும்  இங்கே இருங்கள்.நான் போய் அம்மாவை அழைத்து வர மீண்டும்

ஒரு முறை முயற்சி செய்கிறேன்.அப்படி அவர் திரும்பவும் வர மறுத்தால்,

நான் ஒரு இரண்டு வருடம் அவருடன் இருக்கிறேன்.பிறகு சூழ்நிலை

எப்படி அமையும் என்று பார்ப்போம்".


     மீனா யோசிக்கவே இல்லை."அட! இது மிகவும் நல்ல விஷயம்தானே!

இதற்காகவா இவ்வளவு நாட்கள் இப்படி அல்லாடிக் கொண்டிருந்தீர்கள்?.

ஏறக்குறைய நானும்உங்கள் நிலமையில்தான் இருந்தேன்.எப்போடா  நம்ப

சொந்த பந்தமெல்லாம்  பார்ப்போம் என்றிருந்தது.அப்பாடா! இப்போதுதான்

மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.நாம் கிளம்புவதற்குள் சில ஏற்பாடுகள்

செய்ய வேண்டி இருக்கு.அதை நான் பார்த்துக் கொள்கிறேன்.இப்போதைக்கு

 நம்  ஸ்ரீதர்  இங்கேயே இருக்கட்டும்.நம் இருவரும் எப்போது கிளம்பலாம்

 என்று முடிவு செய்து விட்டு டிக்கெட்டிற்கு ஏற்பாடு செய்து விடுங்கள் ".

மிகவும் இயல்பாகச் சொன்னாள் மீனா.


    மீனாவின் இந்த இயல்பான பதிலில் அயர்ந்துதான் போனான் விஜயன்.



    Part 6                                                                                             தொடரும்........


                                                                                             

                                                                                                                          

 


 


    

No comments:

Post a Comment