Wednesday, August 20, 2014

9.Thai Mann.

   விஜயனுக்கு தனது சொந்த மண்ணை நெருங்க நெருங்க அந்த மண்

சம்பந்தப் பட்ட எல்லா விஷயங்களும் அலைஅலையாய் வந்து மனதில்

மோதி மோதி சென்றன.ஒரு பக்கம் இந்த இருபது வருடங்களாக சொந்த

மண்ணை மிதிக்காமல் அதாவது மதிக்காமல்  இருந்த விளைவால், உற்பத்தி

ஆகிக் கொண்டேயிருந்த அந்தக் குற்ற உணர்வு அவனை தகித்துக்

கொண்டிருந்தது. இன்னொரு புறம் தன் அன்புத் தாயையும்,தன்  அன்பு

சகோதரியையும் இதுவரை கடிதங்கள் மூலம் பார்த்தும்,பேசியும் வந்துக்

கொண்டிருந்த கனவுத் தருணங்கள் இப்போது நிஜத் தருணங்களாக மாறும்

நெகிழ்வு நெருங்கிக் கொண்டிருப்பதை எண்ணும்போது பாசமும்,நேசமும்

மாறி ,மாறி அவன் நெஞ்சில் மோதி அவனைத் திக்குமுக்காடச் செய்தன.


   விஜயன் தான் கொண்டு வந்த பொருள்களை எல்லாம் சரிபார்த்து விட்டு

விமான நிலையத்திற்கு வெளியே வந்தான்.மிகவும் அதிகமான

பொருள்கள்தான்.விமானத்தில் அனுமதிக்கப்பட்ட எடை வரை பலதரப்பட்ட

பொருள்கள் அவன் முன்னால் பரந்து விரிந்து கிடந்தன.பலதரப்பட்ட

சொந்தங்களுக்கும்  தன் பாசத்தையும், நேசத்தையும் , மரியாதையையும்

 உணர்த்தும் விதமாக அவரவர் இயல்புக்கு ஏற்ப அளிக்கப்பட வேண்டிய

பொருட்கள்.பெரிய வண்டியாகவே பார்த்தான். 


   விஜயன் பயணம் செய்த அந்த வண்டியின் ஓட்டுனர் விஜயனின் தாய் மொழி

பேசுபவர்தான்.முதலில் மிகவும் உற்சாகமாக பேச்சைத் துவக்கினார்.ஆனால்

விஜயனின் உற்சாகமற்ற பதிலைக் கேட்டதும்,அவர் தன் விசாரணையை

நிறுத்திக் கொண்டு,வண்டியில் இசைத்துக் கொண்டிருந்த இசையின் ஒலி

அளவை சற்று அதிகப்படுத்திவிட்டு,சாலையில் கவனம் செலுத்தினார்.



    உண்மையில் அந்த ஓட்டுனரின் பாடல் தொகுப்பு மிகவும் சிறப்பானதாக

இருந்தது.பயணத்திற்கு மிகவும் ஏற்றதாக இருந்தது.ஒவ்வொருப்

பாடலும் பயணம் செய்பவரை அவருக்கு அறிமுகமான ஏதாவது  ஒரு

பிராயத்திற்கோ அல்லது அவருக்கு அறிமுகமான ஏதாவது ஒரு

சூழ்நிலையின் பின்னணிக்கோ சென்று சேர்த்து,சேர்த்து ,மீட்டு,மீட்டு

வந்தது.



   உண்மையில்,உற்சாகமான மன நிலையில் பயணம் செய்பவர்கள்

அந்தப் பாடல்களின் தொகுப்பை மனமார இரசித்திருப்பார்கள்.அந்த இனியப்

பாடல்களின் தொகுப்புக்கு உரிமையாளரான அந்த வண்டி ஓட்டுனரையும்

வெகுவாக பாராட்டி இருப்பார்கள்.இன்னும் சொல்லப்போனால் பயணம்

செய்பவரின் பிராயத்திற்கு ஏற்ப நேர்த்தியான நல்லப் பாடல்களை இசைக்கச்

செய்வதில் அந்த ஓட்டுனருக்கு ஒரு சாதுரியம் இருப்பதாகத் தோன்றியது.

ஆனால்,இதை எல்லாம் உள்வாங்கும் மனநிலையில் விஜயன் இல்லை.

அதாவது அவன் மனம் அவனிடத்தில் இல்லை.அதுதான் உண்மை.




   அது மட்டுமின்றி விஜயனுக்கு  இன்னொரு முக்கியமான விஷயமும்

புரியவில்லை.புரியவில்லை  என்பதை விட பெரும் புதிராக வேறு இருந்தது.

அவனை அயல் நாட்டில் இருக்க விடாமல் இப்படி இரும்புப் பிடியாய்

இழுத்துக் கொண்டு வருவது எது என்பதை அவனால் அனுமானிக்கவே

முடியவில்லை." ஒருவேளை அம்மாவின் இறுதிக் காலம் நெருங்கி

விட்டதோ! ".அந்த எண்ணம் அவனைத் தூக்கி வாரிப் போட்டது.பெரும்

திகிலடைந்துப்  போனான்.


   விஜயனை அவ்வப்போது கவனித்துக் கொண்டு வந்த அந்த நடு வயது

வண்டி ஓட்டுனருக்கு,விஜயனின் முகபாவம் மிகவும் கலக்கம் ஏற்படுத்தியது.

அவர், வண்டியின் இசையை முற்றிலும் நிறுத்தினார்.வண்டியின் வேகத்தை

படிப்படியாகக் குறைத்து வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தினார்.நன்றாக

விஜயன் பக்கம் திரும்பி,"ஸார்! இன்னும் ஒரு கால் மணி நேரத்தில் ஊர் வந்து

விடும்.ஆனால் உங்களுக்கு ஏதோ உடம்புக்கு முடியலை போலிருக்கு.போற

வழியில் எனக்குத் தெரிந்த டாக்டரிடம் காட்டி விட்டுப் போவோமா!

ஒவ்வொரு ஐந்து கிலோ மீட்டருக்கும்,ஒரு டாக்டரின் நம்பர் என்னிடம்

இருக்கிறது.என் வண்டியில் ஏறும் பயணிகளுக்கு  உதவத்தான் இந்த

 ஏற்பாடு .பாவம்!எவ்வளவு தூரத்திலிருந்து என்ன என்ன வேலை விஷயமாக

வருவார்களோ தெரியாது.என்னால் முடிந்த ஒரு சிறிய உதவி;நிறைய

பேருக்கு இந்த ஏற்பாடு மிகவும் உதவியாக இருக்கிறது ".என்று மிகவும்

பரிவுடன் பவ்யமாகக் கூறினான்.


   விஜயன் இப்போதுதான் அந்த வண்டியின் ஓட்டுனரைத் தெளிவாகப்

பார்த்தான்.தன் பணியில் ஒரு நிறைவுப் பெறும் ஒரு தெளிந்த முகம்.பார்க்க

விருப்பம் உண்டாகும் முகம்.அந்த முகத்தின் களையில் ஒரு வசீகரம்

இருந்தது.அகம் மலர்ந்தால்தான் இந்த மாதிரி ஒரு முகம் மலரும்.தன்னைக்

காண்போரை  எல்லாம் மலரச் செய்யும்.வியந்தான் விஜயன்.அந்த வியப்பின்

ஊடே," இல்லேப்பா!எனக்கு ஒன்றும் இல்லை.நானே ஒரு டாக்டர்தான்.அயல்

நாட்டிலிருந்து நிரம்ப நாள் கழித்து சொந்த ஊர் பார்க்க வர்றேன்.எனது

அம்மாவையும்,அவரை கவனித்துக் கொண்டிருக்கும் எனது அக்காவையும்

பார்க்கும்போது நிலைத் தடுமாறாமல் இருக்க வேண்டுமே என்ற

கவலைதான். ஆனாலும்,பயணிகளுக்கான உன்னுடைய சமயோசித ஏற்பாடு

மிகவும்  நல்ல ஏற்பாடு. கடவுள் என்றும் உன் நல்ல மனதிற்கு பக்க பலமாய்

இருப்பார்" என்று மனதார வாழ்த்தினான்.


   அந்த வண்டி ஓட்டுனருக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சி." நிரம்ப சந்தோஷம்

ஸார்!உங்களை மாதிரி பெரியவங்க வாழ்த்து என்னைப் போன்றோரை

இன்னும் நாலு நல்லது செய்ய உற்சாகப் படுத்தும் ஸார்! நான் சந்தோஷப்

பட்ட மாதிரியே உங்க சொந்த ஊரிலேயும் உங்களுக்கு நிறைய

சந்தோஷங்கள் காத்துக்கிட்டிருக்கும் ஸார் !.கவலைப் படாமே உங்க ஊர்

மண்ணிலே  உங்க கால்களை பதிய விடுங்க ஸார்!.இப்போ போலாமா ஸார்!"


    அந்த ஓட்டுனரின்,அந்த ' ஸார்!ஸார்! ' இல் இருந்த பவ்யமும்,அக்கறையும்

விஜயன் மனதை வெகுவாக இலகுவாக்கின.சீராகச் செல்லும் வண்டியைப்

போலவே விஜயனது எண்ணங்களும் சீராயின.அவனது சொந்த ஊரும்

நெருங்கிக் கொண்டிருந்தது.



                                                                                     

 part10                                                                                                     தொடரும்............











 







  

No comments:

Post a Comment